Thursday, March 5, 2015

80 வயது சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை உறுதி


80 வயது சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை உறுதி
ஆசிரியர் தேர்வு ஊழல் வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
புதுடெல்லி, மார்ச்.6-அரியானாவில் நடந்த ஆசிரியர் தேர்வு ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு விசாரணை கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனையை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது.ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல்இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 80), கடந்த 1999-2005-ம் ஆண்டுகளில் அரியானாவில் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். அங்கு 2000-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 206 இளநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இந்த நியமனத்தில் ஏராளமான முறைகேடு நடந்திருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. போலி ஆவணங்களை கொடுத்தும், ஆவணங்களை திருத்தியும் ஏராளமானோரை பணி நியமனம் செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.55 பேர் மீது வழக்குநாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் ஆசிரியர் தேர்வு ஊழல் விவகாரத்தில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 8 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், 44 பேருக்கு தலா 4 ஆண்டுகளும், ஒருவருக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஐகோர்ட்டில் மேல்முறையீடுஆனால் தனது வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறை தண்டனையை ரத்து செய்யுமாறு ஓம் பிரகாஷ் சவுதாலா டெல்லி ஐகோர்ட்டில் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி மேல்முறையீடு செய்தார். மேலும் அவரது மகன் அஜய் சவுதாலா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சஞ்சீவ் குமார், வித்யா தர் மற்றும் ஷேர் சிங் பத்சமி ஆகியோரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 10 ஆண்டு சிறை உறுதிஇதில் ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலா ஆகியோருக்கு விசாரணை கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை ஐகோர்ட்டு நீதிபதி சித்தார்த் மிரிதுல் உறுதி செய்தார். மேலும் சஞ்சீவ் குமார், வித்யா தர் மற்றும் ஷேர் சிங் பத்சமி ஆகியோருக்கும் விசாரணை கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.மேலும் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கும், சஞ்சீவ் குமாருக்கும் நீதிபதி தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். மற்ற 3 பேருக்கும் தலா ரூ.1,300 அபராதம் விதிக்கப்படுவதாக அறிவித்தார்.இந்த வழக்கில் மற்ற 50 பேருக்கு விசாரணை கோர்ட்டு வழங்கிய தண்டனை காலம் 2 ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக அறிவித்த நீதிபதி, குற்றம் புரியும் வகையில் அவர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டதாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.கருணை காட்ட மறுப்புமுதியவரான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு கருணை காட்ட வேண்டும் என்று முன் வைக்கப்பட்ட வாதத்தை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தீர்ப்பின் போது நீதிபதி சித்தார்த் மிரிதுல் கூறினார். அரியானாவின் முதல்-மந்திரியாக பதவி வகித்த ஓம் பிரகாஷ் சவுதாலா, இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், முன்னுதாரணமாகவும் விளங்கி இருக்க வேண்டும் என்றும், ஆனால் அவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அவர்களை ஏமாற்றிவிட்டார் என்றும் அப்போது நீதிபதி குறிப்பிட்டார்.இழிவுபடுத்தி விட்டனர்அரியானாவில் நடந்த இந்த மிகப்பெரிய ஊழல் மூலம், ஆசிரியர்கள் நியமனத்தை குற்றவாளிகள் இழிபடுத்தி விட்டதாகவும், இத்தகைய ஊழல்கள் குழந்தைகளுக்கான கல்வியின் தரத்தை மிகவும் குறைப்பதோடு, அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையையும் பாதிக்கும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருக்கிறார். இந்த ஊழல் மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விட்டதாகவும், வேலைவாய்ப்பு இல்லாமல் காத்து இருக்கும் இளைஞர்களின் மனதில் ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். 


நன்றி - தினத்தந்தி 

பிகு : பெண் தெய்வமாக நினைத்துக்கொண்டிருக்கும் அம்மையாரும் அவரது பக்தர்களுக்கும் இந்த தீர்ப்பை பார்த்தார்களா ?! 

No comments: